Tuesday, August 14, 2018

Tnpsc group 4-person list selected for uploading certificates-released on 27 August

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்யத் தகுதியானோரின் பட்டியல் வரும் 27-இல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4-இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை கடந்த பிப்ரவரி 11-இல் நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 30-இல் வெளியிடப்பட்டது. தேர்வு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய தேதி வரும் 16 முதல் 30-ஆம் தேதி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கால தாமதத்துக்குக் காரணம்: கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்பட்டதன் காரணமாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு அதற்குறிய சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் வரும் 27-ஆம் தேதியன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)  வெளியிடப்படும். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தச் சேவைக்கென தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு இணைய சேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் இல்லாவிட்டால்...: பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரகள் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களை கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒருவேளை விண்ணப்பத்தில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை எனில் தங்களிடம் சான்றிதழ் இல்லை என்பதைக் குறிப்பிட்டு தேர்வுக் கட்டுப்பாடு அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து உரிய இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஏதேனும் சில விவரங்களுக்கு மட்டும் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

VOCATIONAL EDUCATION SECONDARY LEVEL